தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்

2014 ல் இன்று (10-07-2014) வியாழக்கிழமை திருநெல்வேலிச் சீமையிலே திருத்தேர்விழா

     தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து சிவசபைகளில் இரண்டு சபைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தாமிர சபையாகவும் ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப் பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப் பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரம் கால் மண்டபமும் அதில் நடைபெறும் சுவாமி அம்பாள் திருகல்யாணமும் கண்கொள்ளாக் காட்சியாகும்.




மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் 
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே 
ஈசன் எந்தை இணையடி நீழலே 

நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும் 
நமச்சி வாயவே நானறி விச்சையும் 
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே 
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே. 


வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் 
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச் 
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே 
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.

                                              ஓம்நமச்சிவாய
                                                                ******
தாருகாவனத்து வாழுந் தாபர் முன்னோர் காலஞ் சேருமெய்த் 
 தருமந்தானே தெய்வமென்றிருந்தேன் கோனைக் கோரமாய்
 நிந்தை செய்த கொடியதோர் பாவந் தீர வாரமாய் தொழுது
 போற்றி மகிழ திருமூல லிங்கம்''
 
-என்கிறது திருநெல்வேலித் தல புராணம். 


சுவஸ்தி ஸ்ரீ 1189  ஆம் ஆண்டு ஜய   வருடம் ஆனி மாதம் 26 ம் நாள் (10-07-2014) வியாழக் கிழமை வளர்பிறை பிரதோஷ நாளில் ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலய 510 வது ஆனித தேரோட்ட உற்சவம் நடைபெற இருக்கின்றது.  இத்திருக்கோவில்  தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயங்களுள் ஒன்றாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப் பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப் பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரம் கால் மண்டபமும் அதில் நடைபெறும் சுவாமி அம்பாள் திருகல்யாணமும் கண்கொள்ளாக் காட்சியாகும்.

     இத்திருத்தலத்தில். ஆனிபெருந்திருவிழா தேரோட்டம் 10 நாட்களுக்கு ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.  இத்தேரோட்டத்தை ஓட்டி அநேகமாக  ஆண்டுதோறும் பொருட்காட்சி நடைபெறும்.  இந்த ஆண்டும் 02-07-2014 முதல் துவங்கி, நெல்லை மாநகரமே விழாக்கோலம் பூண்டு ஜொலிக்கிறது.  இத்தருணத்தில் இத்திருக்கோவில் வரலாற்றை சற்றே அறிவோமா..!..

இக்கோயிலில் நெல்லையப்பர் என்கிற பெயரில் மூலவரும், காந்திமதி என்கிற பெயர் அம்பாளும் வீற்றிருக்கின்றனர். புராணகாலத்தில் இவ்வூர் வேணுவனம் என்றே அழைக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது.
முன்னொரு காலத்தில் வேதபட்டர் என்கிற பட்டர் சிவபெருமானிடம் அதிக பக்தி கொண்டவராக விளங்கினவராக திகழ்ந்தார். தன் மேல் அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியை சோதிக்க சிவபெருமான் எண்ணினார். அதன் காரணமாக சிவபெருமான் வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார். வேதபட்டரும் தினமும் வீடுவீடாக சென்று நெல் சேகரித்து இறைவனின் நைவேத்தியத்திற்காக பெற்ற நெல்லை சன்னதி முன் உலரப் போட்டு குளிக்கச் சென்றார். அப்போது திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது.
குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழை தண்ணீரில் நெல் நனைந்து விடப்போகிறது என்று எண்ணி வேகமாக ஓடி வந்து பார்க்கையில் நெல்லைச் சுற்றி மழை நீர் நெல்லை கொண்டு செல்லாத படி இருப்பதையும் நடுவே நெல் வெயிலில் காய்வதையும் கண்டு அசந்தார்.
மழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு ஆச்சர்யப்பட்ட வேதபட்டர் இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். மன்னன் ராம பாண்டியனும் இந்த அதிசயத்தை காணவிரைந்தார். நெல் நனையாமல் இருப்பதைக் கண்ட மன்னனும் அசந்தார். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார். உடனே நெல் நனையாது காத்த இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலி நாதர் என்று அழைக்கலானார். அதுபோல் அதுவரை வேணுவனம் என்றிருந்த அப்பகுதியை நெல்வேலி எனவும் மாற்றியமைத்தார்.
நெல்வேலி தற்போது திருநெல்வேலியாக மாறி எல்லோராலும் திருநெல்வேலியாக அழைக்கப்படுகிறது. இப்படிப் புகழ் பெற்ற இத்திருத்தலத்தில் உள்ள இறைவன் சுவாமி வேணுநாதர், வேய்த நாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இறைவனை போல் இத்தலத்தில் உள்ள அம்பாளும் வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். அதுபோல் விநாயகர் பொல்லாப் பிள்ளையார் என்றும், முருகன் ஆறுமுகப் பெருமான் என்றும் அழைக்கப்படுகிறார்.
திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற புகழ்மிக்க தலமாக விளங்குகிறது இத்தலம். அதுபோல் அருணாசல கவிராயரால் வேணுவன புராணத்திலும், சொக்கநாபிள்ளைாயல் காந்திமதியம்மை பதிகத்திலும் பாடப்பெற்ற பெருமையுடையது. சுமார் 32 தீர்த்தங்கள் கொண்டது இத்திருத்தலம் என்பதும் முக்கியமான விஷயம்.
சிவதலங்களிலேயே நெல்லுக்கு வேலி இட்டு காத்த பெருமான் எழுந்தருளியுள்ள முக்கியதலமாக விளங்கிறது இத்திருத்தலம். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த தலமாக விளங்குகிறது.

இத்திருத்தலத்தில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் ஏராளமான புராண, இதிகாச கதைகளை கொண்டு விளங்குவதாகும். இக்கோயில் சுற்றுப்பிரகார மண்டபங்கள் உயர்ந்து பருத்த கற்றூண்களால் தாங்கப்பட்டு உள்ளது.
சிவபெருமான் நடனமாடிய ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோயில் திருத்தலமும் ஒன்று என்பது சிறப்பாகும்.

இக்கோயிலுக்கு வந்து வணங்குவோர்க்கு மனஅமைதியும் நல்வாழ்வும் உண்டாகும் என்பது ஜதீகம். இங்கு குடிகொண்டிருக்கும் காந்திமதி அம்பாள் மிகவும் சிறப்புமிக்கவும் என்று சொல்லப்படுகிறது. மதுரை மீனாட்சிக்கு சமமான சிறப்பு பெற்று விளங்கும் காந்திமதி அம்பாளை வணங்குவோர்க்கு அவர்கள் வாழ்வின் கஷ்டங்கள் நீங்கி நல்ல வாழ்வும், செல்வசெழிப்பும் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.
பக்தர்கள் தங்கள் காணிக்கையாக பால், தயிர், இளநீர், எண்ணெய் மற்றும் இறைவனுக்கு அபிஷேகம் போன்றவைகளை செய்கின்றனர். இறைவனுக்கு நைவேத்தியம் செய்து வரும் பக்தர்களுக்கு வழங்கி தங்கள் நேர்த்திக் கடனை நிறையப் பேர் நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.  இத்திருக்கோவிலில் ஆடிப்பூர உற்சவம், புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா என்று நிறைய திருவிழாக்கள் இக்கோயிலில் நடைபெறுகிறது. இக்கோவில் தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர்திருவிழாக் காலங்கள் மட்டுமல்லாமல் இதர நாட்களிலும் நிறைய பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து நெல்லையப்பரை தரிசித்து செல்கின்றனர். தங்கள் பிரார்த்தனைகளுக்கான நேர்த்திக் கடனையும் செய்கின்றனர். 

 பக்தர்கள் அனைவரும் அலைகடலென திரண்டு வந்து ஸ்ரீ அருள்மிகு  நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாளை தரிசித்து பலன் பெற்றிட சுவாதி ஜோதிடாலயம் மூலம் அன்போடு அழைக்கிறோம். நன்றி.
பக்திப் பரவசத்துடன்,
ஜோதிட தம்பதி
நா. ரெங்கன்
அ. உஷா ரெங்கன்.

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை