தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்


 *நாலாயிர திவ்யப்பிரபந்தம்*


நாலாயிர திவ்ய பிரபந்தம்

தொகுக்கப்பட்ட வரலாறு

ஓம் நமோ நாராயணா

நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுக்கப்பட்ட வரலாறு இதோ தமிழ்நாடு திருநெல்வேலி தூத்துக்குடி அருகாமை ஆழ்வார் திருநகரி ஸ்தலத்தின் பெருமையோ பெருமையல்லவா.,

திருமங்கையாழ்வார்   காலத்திற்குப்பின் பல காரணங்களால் ஆழ்வார்கள் பாசுரங்களை பாராயணம் செய்வதை மக்கள் கைவிட்டு விட்டார்கள். இவ்வுலகில் 4000 ஆண்டுகள்    ஆழ்வார்கள்  பாசுரங்கள்  வழக்கொழிந்துபோயின. 

 

4000 ஆண்டுகளுக்குப்பிறகு சிதம்பரத்திற்கு அருகிலுள்ள காட்டுமன்னார்கோயில் என்றழைக்கப்படும் காட்டுமன்னார்குடியில் நாதமுனிகள் என்னும் வைணவர் அவதரித்தார்.


அவர் அப்பதியின் ராஜகோபாலன் மீது ஆழ்ந்த பக்திகொண்டு அப்பெருமானுக்கான கோயில் கைங்கர்யங்களை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்துவந்தார். 


  அவர் ஓர்நாள் திருக்குடந்தை என்னும் கும்பகோணம் சாரங்கபாணிப் பெருமாள் கோயிலுக்குச்சென்று மூலவர் ஆராவமுதப்பெருமாளை சேவித்துக்கொண்டிருந்தார்.


அப்போது தென் தமிழ்நாட்டிலிருந்து யாத்திரை வந்திருந்த சில வைணவர்கள் 


*ஆராவமுதே ! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே*


*நீராயலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே*


*சீரார்செந்நெல் கவரிவீசும் செழுநீர்த் திருக்குடந்தை*


*ஏரார்கோலம் திகழக்கிடந்தாய் கண்டேன் எம்மானே.*


எனத்துவங்கி நம்மாழ்வார் திருக்குடந்தை ஆராவமுதன் மீது அருளிச்செய்த  பாசுரங்கள் பதினொன்றையும் இனிய இசையில்பாடி வழிபட்டுக்கொண்டிருந்தார்கள்.


அவ்வடியார்கள் பாடிய

*உழலை என்பின் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்*


*கழல்கள் அவையேச் சரணாக்கொண்ட குருகூர்ச் சடகோபன்*


*குழலின் மலியச்சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்*


*மழலை தீரவல்லார் காமர்மானேய் நோக்கியர்க்கே.*


 என்னும் 11 ஆம் பாசுரம் நாதமுனிகளின் கவனத்தை ஈர்த்தது.   


அவர் அவ்வடியார்களிடத்தில்

*ஓராயிரத்துள் இப்பத்தும்* என்றால் "இதுபோன்ற இனிய பாசுரங்கள் ஆயிரம் உள்ளனவோ ? அவற்றை நீவிர் அறிவீரோ ?" என வினவினார்.


அதற்கு அவ்வடியார்கள்

 "சுவாமி !

இப்பதினோறு பாசுரங்களே யாம் அறிவோம்." இவை நம்மாழ்வார் அருளிய பாசுரங்கள்.  நாங்கள் நம்மாழ்வாரின் சீடரான மதுரகவியாழ்வாரின் மரபில் வந்தவர்கள். எங்கள் பரம்பரையில் இப்பதினோறு பாசுரங்கள்

மட்டுமே செவிவழியாக  போதிக்கப்பட்டுவருகின்றன. இதனை எங்களுக்குக் கற்பித்த பராங்குசதாசர் என்பவர் தற்போது திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்துவருகிறார். அவரை தாங்கள் அனுகினால் தங்கள் சந்தேகம் தீரவாய்ப்புள்ளது" என்று கூறினார்கள். 


நாதமுனிகள் 1000 பாசுரங்களையும் அறியும் ஆர்வமுடன் ஆழ்வார் திருநகரி சென்று பராங்குசதாசரைச் சந்தித்தார். அவரைப் பணிவுடன் வணங்கி தம் விருப்பத்தைத் தெரிவித்தார்.


பராங்குசதாசர் " அன்பரே ! நம்மாழ்வாரின் 1000 பாடல்களையும் அறியும் உம் ஆர்வத்தை யாம் பாராட்டுகிறோம். ஆனால் எமக்கே பதினோறு பாசுரங்கள்தான் தெரியும். நம்மாழ்வார் ஒருவரே 1000 பாசுரங்களையும் கூறமுடியும். அவர் பரமபதம் சென்று (உயிர் துறந்து) பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன. என்ன செய்ய ? எம் மூதாதையரான மதுரகவியாழ்வார் தம் குருவான நம்மாழ்வாரையை இறைவனாக பாவித்து *கண்ணிநுண் சிறுத்தாம்பு*  எனத்துவங்கி பதினோரு பாசுரங்கள் அருளிச்செய்துள்ளார். அவற்றை நான் உமக்கு உபதேசிக்கிறேன். அவற்றை நீர் நம்மாழ்வார் வாழ்ந்த புளியமரத்தடியில் அமர்ந்து இசைத்தால்  ஒரு வேளை நம்மாழ்வார்  பரமபதத்தினின்றும் மீண்டுவந்து உமக்கு 1000 பாசுரங்களையும் உபதேசிக்க வாய்ப்புள்ளது." என்று கூறி *கண்ணிநுண் சிறுத்தாம்பு* துவங்கி 11 பாசுரங்களையும் நாதமுனிகளுக்கு உபதேசித்தார்.


நாதமுனிகள் புளியமரத்தடியில் அமர்ந்து, நம்மாழ்வாரை மனதிலிருத்தி அப்பதினோரு பாசுரங்களை இடைவிடாது மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டேயிருந்தார். 10,000 மாவது முறை பாடிமுடித்ததும் நம்மாழ்வார் அவர் முன் தோன்றினார். நம்மாழ்வார் குருவாக புளியமரத்தடியில் அமர்ந்து நாதமுனிகளுக்கு திருவாய்மொழி 1102 பாசுரங்களையும் உபதேசித்தருளினார். நாதமுனிகள் மிக்க மகழ்ச்சி அடைந்து நம்மாழ்வாரை வீழ்ந்து வணங்கி விடைபெற எத்தனித்தார். நம்மாழ்வார் "ஆயிரம் போதுமோ ? மற்ற ஆழ்வார்கள் அருளிச்செய்த மேலும் 3000 பாசுரங்கள் வேண்டாவோ ?" என்றார். இன்ப அதிர்ச்சி அடைந்த நாதமுனிகள் அவற்றையும் உபதேசித்தருளுமாறு வேண்டினார். நம்மாழ்வாரும் மேலும் 3000 பாசுரங்களையும் உபதேசித்தருளினார். 


நாதமுனிகள் பேரானந்தமடைந்தார்.

நம்மாழ்வார் சந்தேகமிருப்பின் நாளை வாரும் என்றார்.

மறுநாள் நாதமுனிகள் மீண்டும் புளியமரத்தடிக்குச்சென்றார். அங்கே முன்னதாகவே  நம்மாழ்வார் வந்து  வீற்றிருந்தார். 


" சுவாமி ! *பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்*


*நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றுமில்லை*


*கலியும்கெடும் கண்டுகொண்மின்*"

என்று கூறியுள்ளீர்களே, எப்படி எமனுக்கு வேலையில்லாமல் போகும் ?" என்று கேட்டார் நாதமுனிகள்.


உடனே நம்மாழ்வார்  தம் பையிலிருந்து ஓர் விக்கிரகத்தை எடுத்து நாதமுனிகளிடம் கொடுத்து, " இவர் பெயர் இராமானுஜர். இவர் பிற்காலத்தில் இவ்வுலகில் அவதரித்து வைணவ சம்பிரதாயத்தை  நிலைநாட்டுவார். அப்போது மக்கள்  அனைவரும் இவரைப்பின்பற்றி அறவழி நடப்பார்கள். எனவே எமனுக்கு வேலையில்லாமல் போகும்" எனக்கூறினார். மேலும் "இவ்விக்கிரகத்திலுள்ள   உத்தமரை தேடிக்கண்டுபிடித்து வைணவ ஆச்சார்யராகச் செய்யவேண்டியது உமது கடமையாகும்" என்றும் கட்டளையிட்டு மறைந்துபோனார் (மீண்டும் பரமபதம் சென்றார்).


நாதமுனிகள் 4000 பாசுரங்களைப்பெற்ற மகிழ்ச்சியோடும், பவிசாச்சார்ய விக்கிரகத்தைப்பெற்று (நம்மாழ்வார் அளித்த விக்கிரகம். இது தற்போது ஆழ்வார் திருநகரியில் உள்ளது) வைணவத்தைச் சிறப்பிக்கும் கடமை உணர்வோடும் காட்டுமன்னார்கோயில் வந்து சேர்ந்தார்.


4000 பாசுரங்களையும் ஓலைச்சுவடியில் பதிவேற்றினார். அவற்றிற்கு *நாலாயிர திவ்யப்பிரபந்தம்* எனப்பெயர் சூட்டினார். முதலாமாயிரம், இரண்டாமாயிரம், மூன்றாமாயிரம் மற்றும் நாலாமாயிரம் என நான்கு தொகுதிகளாகப்பிரித்தார். 


*முதலாமாயிரம்*


1.பெரியாழ்வார் - திருப்பல்லாண்டு : 12 பாசுரங்கள்

2.பெரியாழ்வார் - பெரியாழ்வார் திருமொழி : 461 பாசுரங்கள் 

3.ஆண்டாள் - திருப்பாவை : 30 பாசுரங்கள் 

4.ஆண்டாள் - நாச்சியார் திருமொழி : 143 பாசுரங்கள் 

5.குலசேகராழ்வார் - பெருமாள் திருமொழி : 105 பாசுரங்கள் 

6.திருமழிசையாழ்வார் - திருச்சந்த விருத்தம் : 120 பாசுரங்கள் 

7.தொண்டரடிப்பொடியாழ்வார் - திருமாலை 45 பாசுரங்கள் 

8.தொண்டரடிப்பொடியாழ்வார்  - திருப்பள்ளியெழுச்சி : 10 பாசுரங்கள் 

9.திருப்பாணாழ்வார் - அமலனாதிபிரான் 10 பாசுரங்கள் 

10.மதுரகவியாழ்வார் - கண்ணிநுண் சிறுத்தாம்பு : 11 பாசுரங்கள் 


முதலாமாயிரம் மொத்தம்  947 பாசுரங்கள். 


*இரண்டாமாயிரம்*


1.திருமங்கையாழ்வார் - பெரியதிருமொழி : 1084 பாசுரங்கள் 

2.திருமங்கையாழ்வார் - திருக்குறுந்தாண்டகம் : 20 பாசுரங்கள் 

3.திருமங்கையாழ்வார் - திருநெடுந்தாண்டகம் : 30 பாசுரங்கள் 


இரண்டாமாயிரம் மொத்தம் 1134 பாசுரங்கள்.


*மூன்றாமாயிரம்*


1.பொய்கையாழ்வார் - முதல் திருவந்தாதி : 100 பாசுரங்கள் 

2.பூதத்தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி :  100 பாசுரங்கள் 

3.பேயாழ்வார் - மூன்றாம் திருவந்தாதி : 100 பாசுரங்கள் 

4.திருமழிசையாழ்வார் - நான்முகன் திருவந்தாதி : 96 பாசுரங்கள் 

5.நம்மாழ்வார் - திருவிருத்தம் : 100 பாசுரங்கள் 

6.நம்மாழ்வார் - திருவாசிரியம் : 7 பாசுரங்கள் 

7.நம்மாழ்வார் - பெரிய திருவந்தாதி  : 87 பாசுரங்கள் 

8.திருமங்கையாழ்வார் - திருவெழுக்கூற்றிருக்கை  : 1 பாசுரம்

9.திருமங்கையாழ்வார் - சிறிய திருமடல் : 40 பாசுரங்கள்

10. திருமங்கையாழ்வார் - பெரிய திருமடல்  : 78 பாசுரங்கள் 


மூன்றாமாயிரம் மொத்தம் 709 பாசுரங்கள் 


*நாலாமாயிரம்*


நம்மாழ்வார் - திருவாய்மொழி : 1102 பாசுரங்கள் 


நாலாமாயிரம் மொத்தம் 1102 பாசுரங்கள்


முதலாமாயிரம்     :   947 பாசுரங்கள் 

இரண்டாமாயிரம் :1134 பாசுரங்கள் 

மூன்றாமாயிரம்    :    709 பாசுரங்கள் 

நாலாமாயிரம்        :1102 பாசுரங்கள் 

                                   _________

மொத்தம்                 :3892 பாசுரங்கள்            _________


இவ்வாறு நாதமுனிகள் தொகுத்தளித்த நாலாயிர திவ்யப்பிரபந்தமே இப்போது நாம் பாராயணம் செய்யும் நூலாகும்.


தற்போது மூன்றாமாயிரத்தில் இடம்பெற்றுள்ள   இராமானுச நூற்றந்தாதி 108 பாசுரங்கள்  இராமானுஜர் காலத்திற்குப்பின் சேர்க்கப்பட்டவை.


வழக்கத்தில் இல்லாமலிருந்த நாலாயிர திவ்யப்பிரபந்த்தை மீட்டு நமக்களித்த ஸ்ரீமந் நாதமுனிகள் வைணவ குருபரம்பரையின் முதல் ஆச்சார்யராகப் போற்றப்படுகிறார்.


இவர் நாலாயிர திவ்யப்பிரபந்தம் உலகெங்கும் பரவவேண்டும் என விரும்பினார். எனவே தம் தமக்கை மகன்களான கீழையகத்தாண்டான், மேலையகத்தாண்டான் ஆகிய இருவரையும் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தை இசையமைத்து பாடி பாமர மக்களிடையே பரப்புமாறு கட்டளையிட்டார்.


அவர்களிருவரும் சிறந்த இசை வல்லுனர்கள் ஆதலால் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தைப் பண்ணோடு பாடும் பணியைச் செவ்வனே செய்தார்கள். 


இவர்கள் ஊர்தோறும் சென்று திருமால் கோயில்களில் பண்ணொடும் பாசுரங்களைப்பாடிப் பரப்பிய தொண்டு அரையர்சேவை என்றழைக்கப்பட்டது. 


இவர்கள் மரபின்வழி வந்தவர்களே இந்நாளில் அரையர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.


இப்போதும் திருவரங்கம், திருவில்லிப்புத்தூர், திருவானமாமலை,திருக்குறுங்குடி, ஆழ்வார் திருநகரி ஆகிய ஊர்களிலுள்ள பெருமாள் கோயில்களில் அரையர்கள் மார்கழிமாதம் முழுவதும் அரையர்சேவை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.


திவ்யப்பிரபந்தத்தை முதன் முதலில் அருளிச்செய்தவர் பொய்கையாழ்வார் ஆவார். அவர் அருளிய முதல் பாசுரம் 

*வையம் தகளியா வார்கடலே நெய்யாக*


*வெய்ய கதிரோன் விளக்காக செய்ய*


*சுடாராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை*


*இடாழி நீங்குகவே என்று.*

திவ்யப்பிரபந்தம் முதன் முதலில் தோன்றிய ஊர்  திருக்கோவலுராகும். 


ஆனால் ஸ்ரீமந் நாதமுனிகள் திவ்யப்பிரபந்தத்தைத் தொகுக்கும்போது 

முதன் முதலில் எல்லாம் வல்ல எம்பெருமானாகிய ஸ்ரீமந் நாராயணனை வாழ்த்தித் துவங்குமாறு திவ்யப்பிரபந்தம் அமைய வேண்டும் என விரும்பினார். எனவே


*பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்*


*மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வித்திருக்காப்பு*


எனத்துவங்கும் ஆழ்வார்கள் வரிசையில்  எட்டாவது வைணவ அடியாராக அவதரித்த  பெரியாழ்வார் அருளிச்செய்த 12 பாசுரங்களை திவ்யப்பிரபந்தத்தின் முகப்புப் பகுதியாக வைத்து, அதற்குத் *திருப்பல்லாண்டு* எனவும் பெயர் சூட்டினார். 


நம்மாழ்வாரிடமிருந்து ஆழ்வார்கள் பாசுரங்கள் நாலாயிரத்தையும் பெறுதற்குக் காரணமாக இருந்த மதுரகவியாழ்வார் அருளிச்செய்த 11 பாசுரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு அவற்றை முதலாமாயிரத்தின் கடைசிப்பகுதியாக அமைத்து அப்பகுதிக்குக்  *கண்ணிநுண் சிறுத்தாம்பு*  என்றே பெயரிட்டார். 


இதுவே நாலாயிர திவ்யப்பிரபந்தம் தொகுக்கப்பட்ட வரலாறாகும்.


ஸ்ரீ வைணவ குருபரம்பரையை நிலைநாட்டிய ஸ்ரீமந் நாதமுனிகளுக்குப் பல சீடர்கள் இருந்தார்கள். அவர்களுள் உய்யக்கொண்டான், குருகைக்காவலப்பன் ஆகியோர் முதன்மையான சீடர்கள் ஆவார்கள்.

உய்யக்கொண்டான் பக்தி மார்கத்தையும், குருகைக்காவலப்பன் யோக மார்கத்தையும், தம் குருநாதரிடம் கசடறக் கற்றார்கள்.


பாமரர்களை உய்விக்கச் சிறந்த நெறி பக்தி மார்க்கமே என உணர்ந்த ஸ்ரீமந் நாதமுனிகள், தமக்குப்பின் உய்யககொண்டாரை ஆச்சார்யராக நியமித்து அவரிடம் நம்மாழ்வார் அளித்த பவிதாச்சார்ய விக்கிரகத்தைக் கொடுத்து இராமானுஜரை கண்டறியச்சொன்னார்.


உய்யக்கொண்டாரிடமிருந்த அவ்விக்கிரகம் மணக்கால்நம்பி மூலமாக ஆளவந்தாரை வந்தடைந்தது. ஆளவந்தார் காஞ்சிபுரம் வரதாஜப்பெருமாள் கோயிலுக்கு யாத்திரை சென்றார். அங்கு திருக்கச்சி நம்பிகள் என்னும் அடியவர் மூலமாக இளையாழ்வான் என்னும் பெயர்கொண்ட ஒளிபொருந்திய தோற்றத்துடன் கூடிய வைணவ இளைஞன் ஒருவனைக்கண்டார். அவ்விளைஞனே தம்மிடமிருக்கும் விக்கிரகத்திலுள்ள எதிர்கால ஆச்சார்யர் என அடையாளம் கண்டார். தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு  நிறைவேறப்போவதை எண்ணி மிக்க மகிழ்ச்சியடைந்தார்.


தம் அனுக்கச்சீடரான பெரியநம்பிகளை, இளையாழ்வானை காஞ்சியிலிருந்து ஸ்ரீரங்கம் அழைத்துவரப்பணித்தார். அவர்கள் ஸ்ரீரங்கம் வருவதற்குள் ஆளவந்தார் (இவ்வுலக வாழ்வை நீத்தார்) பரமபதம் அடைந்தார்.


பின்னாளில் பெரிய நம்பிகளின் பெரு முயற்சியால்  இளையாழ்வான் சந்நியாசம் ஏற்று இராமானுஜர் என்னும் திருநாமத்துடன் ஸ்ரீரங்கம் ஜுயராகப் பொறுப்பேற்றார். வைணவத்திற்குப் பெருந்தொண்டாற்றினார்.


இவ்வாறாக ஸ்ரீமந் நாதமுனிகள் மறைந்து ஏறத்தாழ  400 ஆண்டுகளுக்குப்பிறகு  இராமானுஜர் ஆச்சார்யா பீடத்தை அலங்கரித்தார்.

0 மறுமொழிகள்

Post a Comment

You can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.
எங்கள் முகவரி Address
ஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்
27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி
பாளையம்கோட்டை - 627002
திருநெல்வேலி மாவட்டம்.
தமிழ்நாடு. இந்தியா
Tmt. A. UshaRengan D.Astro.,
Consultant Astrologer,
Swathi Jothidha Aivagam,
27 A, Sivan Koil West Car Street,
Palayamkottai - 627 002
Tirunelveli District.
Tamil Nadu India.
தொலைபேசி: 94434 23897, 94425 86300, 0462 2586300
மின்னஞ்சல்:
tamiljoshier@gmail.com
joshier_urrao@yahoo.com
usharengan@hotmail.com
joshier_usharengan@dataone.in

For Consultation, please visit us or contact us through letter, phone or e mail only. Do not post your questions in the comment.

ஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை