மார்கழி மாத பாவை நோன்பு இருக்க தயாரா ?
சார்வரி வருடம் மார்கழி மாதம் ஒன்றாம் நாள் 16 12 2020 புதன்கிழமை ஆரம்பம்
மார்கழி பூஜை ஆரம்பம்
திருமாலே தனக்கு கணவராக அமைய வேண்டுதல் வைத்து, மார்கழி மாதத்தில் ஆண்டாள் மேற்கொண்ட விரதமே பாவை நோன்பு. இதற்காக அன்னை அதிகாலையில் துயிலெழுந்து தோழியரையும் அழைத்துக் கொண்டு நீராடச் சென்றார். தான் பிறந்த ஸ்ரீவில்லிப்புத்தூரை ஆயர்பாடியாகவும், தன்னை கோபிகையாகவும் பாவனை செய்து, கண்ணனின் இல்லத்திற்குச் சென்று அவனை வணங்கி வந்தார் மாதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் முதலிய உணவு வகைகளைத் தவிர்க்கும் வகையில் இந்த விரதம் அமைந்தது. இந்த விரதத்தை இப்போதும் திருமண நடக்கவிருக்கும் மகளிர் மற்றும் ஆடவர் அனுஷ்டிக்கலாம். காலை 4.30 மணிக்கே நீராடி, திருப்பாவை பாடலை மூன்று முறை படிக்க வேண்டும். உதாரணமாக, மார்கழி முதல்தேதியன்று மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் பாடலைத் துவங்க வேண்டும். மார்கழியில் 29 நாட்களே இருப்பதால், கடைசி நாளில் கடைசி இரண்டு பாடல்களை மூன்று முறை பாட வேண்டும். இத்துடன் தினமும்வாரணமாயிரம் பகுதியில் இருந்து வாரணமாயிரம் சூழ வலம் வந்து, மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத உள்ளிட்ட பிடித்தமான பாடல்களைப் பாட வேண்டும். விரத நாட்களில் நெய், பால் சேர்த்த உணவு வகைகளை உண்ணக்கூடாது. மற்ற எளிய வகை உணவுகளைச் சாப்பிடலாம். ஆண்டாள், பெருமாள் படம் வைத்து உதிரிப்பூ தூவி காலையும், மாலையும் வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் ஆண்டாள் மனம் மகிழ்ந்து, சிறந்த கணவனையும் மற்றும் மனைவி தர அருள் செய்வாள். திருமணத்தடைகளும் நீங்கும்.
மார்கழி நைவேத்யம்: மார்கழி மாதத்தில் எல்லா கோயில்களிலுமே அதிகாலையில் பூஜை நடக்கும். கோயில்களில் மட்டுமின்றி வீட்டையும் சுத்தம் செய்து, காலை 8.30 மணிக்குள் எளிய பூஜை ஒன்றை பெண்கள் செய்யலாம். திருமணமான பெண்கள் இதைச் செய்தால் மாங்கல்ய பலம் கூடும். திருவிளக்கேற்றி, நம் இஷ்ட தெய்வங்களுக்கு பூச்சரம் அணிவித்து அல்லது உதிரிப்பூக்கள் தூவி, அந்தத் தெய்வங்களைக் குறித்த பாடல்களை பாட வேண்டும். சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம், சுண்டல் முதலானவை செய்வதற்கு எளியவையே. கற்கண்டு சாதம் அமுதம் போல் இருக்கும். குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள். பாவை நோன்பு இருக்கும் பெண்கள் மட்டும் நெய், பால் சேர்த்த உணவைச் சேர்க்கக்கூடாது. நெய் சேர்க்காத சர்க்கரைப் பொங்கல், கல்கண்டு சாதம் முதலானவற்றை நைவேத்யம் செய்யலாம்.
திருப்பாவை பிறந்த கதை: கலியுகத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த ஆண்டாள், மனிதர்கள் யாரையும் மணக்கமாட்டேன், பெருமாளையே மணப்பேன் என லட்சிய சபதம் கொண்டாள். கிருஷ்ணாவதார காலத்தில், ஆயர்பாடி கோபியர்கள் கண்ணனை அடைய மேற்கொண்ட பாவை நோன்பை மேற்கொண்டாள். ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்த பெருமாளின் சன்னதிக்குச் சென்று, அவருடைய முகத்தைப் பார்க்க வெட்கப்பட்டு, கையில் இருந்த பாஞ்சஜன்யம் என்னும் சங்கைப் பார்த்து மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் எனத் துவங்கி வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை என முடியும் முப்பது பாடல்கள் பாடினாள். அதுவே திருப்பாவை ஆயிற்று. திரு என்றால் மரியாதைக்குரிய எனப் பொருள். பாவைஎன்றால் பெண். நமது வணக்கத்துக்குரிய பெண் தெய்வமாகிய ஆண்டாள் பாடியதால் இது திருப்பாவை ஆயிற்று. முதல் பாடல் திருப்பாவையின் நோக்கத்தை சுருக்கமாக எடுத்துச் சொல்கிறது. இரண்டு முதல் ஐந்து பாடல்கள் பாற்கடலில் பள்ளிகொள்ளும் பரந்தாமனின் சிறப்புகளைச் சொல்கிறது. ஆறு முதல் 15 பாடல்கள் ஆழ்வார்களுக்கு ஒப்பான அடியார்களை தோழிகளாகக் கற்பனை செய்து அவர்களை எழுப்பிக்கொண்டு கோயிலுக்குச் செல்வதை எடுத்துச் சொல்கிறது. இந்தப் பாடல்களில் மார்கழி மாதத்தில் காலை நேரப் பணிகள் அக்காலத்தில் எப்படி இருந்தன என்பதையும் தெரிந்து கொள்ளலாம். கடைசி 15 பாடல்கள் தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு பெருமாளைக் கெஞ்சும் ஆண்டாளின் மனநிலை புரிகிறது.
வைகறை-மார்கழி: மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒருநாள் ஆகும். இந்த ஒருநாளின் வைகறைப் பொழுதாக மார்கழி அமைகிறது. உடல் சுறுசுறுப்பும், உள்ளத் தெளிவும் நிறைந்த வைகறைக் காலை வழிபாடு எப்போதும் சிறந்தது. எனவே வைகறைப் பொழுதான மார்கழி, தேவர்களை வழிபடுவதற்கு மிகப்பொருத்தமான மாதம் என்பது இந்த மாதத்தின் சிறப்பு. ஸ்ரீகிருஷ்ண பகவான் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று பகவத்கீதையில் அருளினார். காலம் ஒரு கடவுள். காலமாக இருப்பவனும் கடவுள். இவர்களுக்கு இன்னது, இப்போது நடக்கும் என்று காலங்களை நிர்ணயித்து விதிப்பவனும் கடவுள். எல்லாக் காலங்களாகவும் விளங்குகின்ற ஸ்ரீகிருஷ்ணன், மாதங்களில் நான் மார்கழி என்றார். இவரது திருவாய் மொழி, மார்கழியின் சிறப்புகளை உயர்த்திப் பேசுகின்ற திருவாசகமாக அமைந்து விட்டது இந்த மாதத்தின் மற்றொரு சிறப்பு.
ஓசோன் வாயு: மார்கழி வைகறைக் காலத்துப் பனியை அனுபவிப்பது ஒரு சுகம். பனி, படிப்படியே அதிகம் ஆகின்றபோது, அதை அனுபவிக்க தகுந்த உடல் உறுதியும், உள்ள உறுதியும் இருக்க வேண்டும். பனிப்படலத்தை ஊடுருவி வருகின்ற மெல்லிய காற்று தருகின்ற குளிர்ச்சி, சுகம் சுகமே. இந்த இரட்டைச் சுகங்களுடன் மற்றொரு சுகம் மார்கழியில் மட்டும் அதிகமாக கிடைக்கின்றது. வளிமண்டலத்தில் ஓசோன் என்ற வாயுப்படலம் நில உலகத்தில் இருந்து 19 கி.மீ. உயரத்தில் பரந்துள்ளது. இப்படலம் சூரியனிடம் இருந்து வருகின்ற, கேடு விளைவிக்கின்ற புற ஊதாக்கதிர்களை உறிஞ்சி, உயிரினங்கள் அழியாமல் பாதுகாக்கிறது. விடியற்காலை 4 மணி முதல் 6 மணி வரை உள்ள காலம் பிரம்ம முகூர்த்தம் எனப்படுகிறது. வழிபாட்டுக்கு ஏற்ற காலமும் இதுவே. இந்த நேரத்தில் ஓசோன் வாயு நில உலகத்தில் மென்மையாகப் படர்ந்து பரவுகிறது. இது உடலுக்கு நலம் தரும்; புத்துணர்ச்சி தரும். உள்ளத்துக்கு இதம் தரும்; புதுக் கிளர்ச்சி தரும். மார்கழி விடியற்காலையில், ஓசோன் வாயு நிலவுலகத்தில் சற்று அதிகமாகப் பரவுகிறது. மார்கழி விடியற்காலையில், ஏதோ ஒரு ரம்மியமான சூழ்நிலை உருவாகின்றது என்பதைப் பழங்காலத் தமிழர்கள் உணர்ந்தனர். அந்த நேரத்தில் இறைப்பணிகளைச் செய்வதற்கும், அந்தப் பணிகளின் மூலமாகவே பக்திப் பரவசத்தைப் பெறுவதற்கும் முயன்றனர். பூஜை செய்தனர். நோன்பு நோற்றனர். இவ்வாறு மார்கழி விடியலுக்கு ஒரு தனிப்பெருமை கிடைத்தது.
Post a Comment
You can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.
எங்கள் முகவரி Address
ஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்
27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி
பாளையம்கோட்டை - 627002
திருநெல்வேலி மாவட்டம்.
தமிழ்நாடு. இந்தியா
Tmt. A. UshaRengan D.Astro.,
Consultant Astrologer,
Swathi Jothidha Aivagam,
27 A, Sivan Koil West Car Street,
Palayamkottai - 627 002
Tirunelveli District.
Tamil Nadu India.
தொலைபேசி: 94434 23897, 94425 86300, 0462 2586300
மின்னஞ்சல்:
tamiljoshier@gmail.com
joshier_urrao@yahoo.com
usharengan@hotmail.com
joshier_usharengan@dataone.in
For Consultation, please visit us or contact us through letter, phone or e mail only. Do not post your questions in the comment.
ஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்