தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்

 *🌷🌷திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி ஸ்வாமி ஆலயம் சிறப்பம்சங்கள்*


சென்னையில் உள்ள வைணவத் தலங்களில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மிகப் பழமையான தலம் திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிஸ்வாமி  ஆலயம். 


லக்ஷக்கணக்கான திவ்யதேசங்களில் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக சென்னை நகருக்குள் முக்கியத் தலம் இந்த ப்ருந்தாரண்ய க்ஷேத்ரம்.


பிருந்தாரண்ய க்ஷேத்ரம் எனப்படும் இத்தலம் ஏராளமான சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.


ஸ்ரீ வேத வியாசரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இத்தலத்தில் பெருமாளைச் சுற்றி உள்ள ஆலயத்தை திருப்பணி செய்து  பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மவர்மன் அழகான ஆலயத்தை 8-ம் நூற்றாண்டில் புனரமைத்தார்.


இத்தல வரலாறு சுமதி மன்னன் என்பவருடன் தொடர்புடையது. இவர் திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தர்.


இவருக்கு ஒரு தடவை மஹாபாரதப் போரின்போது கிருஷ்ணர் எடுத்த வடிவத்தைக் காண வேண்டும் என்ற நல்விருப்பம் ஏற்பட்டது.

அதாவது மகாபாரதப் போர் நடந்த போது பாண்டவர்களுக்கு ஆதரவாக கிருஷ்ணர் களம் இறங்கினார். போரில் கிருஷ்ணர் எந்த ஆயுதமும் ஏந்தக் கூடாது என்று கௌரவர்கள் கேட்டுக் கொண்டதால் அவர் தேரோட்டியாக மாறினார்.

பார்த்தனுக்கு (அர்ஜுனன்), கிருஷ்ணர் தேரோட்டி (சாரதி)யாக இருந்தார். 

இதனால்தான் நாம் கிருஷ்ண பரமாத்மாவை பார்த்த சாரதி'' என்கிறோம்.

இந்த தேரோட்டி வடிவை காணவே சுமதி மன்னன் ஆசை கொண்டார். அவர் விருப்பத்தை பூர்த்தி செய்ய திருப்பதி பெருமாள் இங்கே  திருவல்லிக்கேணியில்  பார்த்தசாரதியாகக் காட்சி அளிப்பதாக அருளினார். . அதன் அடிப்படையில் இங்கு மூலவரான ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி வேங்கடகிருஷ்ணனாக ஸேவிக்கப்படுகிறார். 


இந்த பெருமாளை இமயமலையில் இருந்த வ்யாஸரிடம் பெற்று இங்கே  ஆத்ரேய மாமுனிவர் பிரதிஷ்டை செய்ததாக அறியப்படுகிறது.


உத்ஸவராக பார்த்தஸாரதி ஸ்வாமி தன் திருமுகம் எல்லாம் மஹாபாரத யுத்தத்தில் பீஷ்மாசார்யரின் அம்பு பட்ட வடுக்களுடன் உள்ளார். 


கோபுரங்களும், மண்டபங்களும் நுட்பமான திராவிட சிற்பக் கலை சிறப்பை வெளிப்படுத்துகின்றன. கருவறையில் மூலவர் ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி எனும் ஸ்ரீவேங்கட கிருஷ்ணன்,  தாயார் ருக்மிணித்தாயார், அண்ணன் பலராமர், தம்பி ஸாத்யகி, புத்திரன் பிரத்யும்னன், பேரன் அநிருத்தன், என குடும்ப ஸஹிதமாக உள்ளார். பலராமர் வரதமுத்திரை காட்டி கலப்பை ஏந்தியுள்ளார்.  தம்பி ஸாத்யகி அவருக்கே உரிய கத்தி ஏந்தியும் பிள்ளையும் பேரனும் உலக்கை எனும் தோமரங்கள் ஏந்தியும் பக்தர்களுக்கு காக்ஷி அளிக்கின்றனர்.


கிருஷ்ணர் தம் மூன்று தலைமுறையுடன் வீற்றிருக்கும் ஒரே தலம் இதுதான்.


அதுபோல கிருஷ்ணர் உலகில் வேறு எங்கும் இல்லாதபடி இங்கு மட்டுமே முறுக்கு மீசையுடன் காணப்படுகிறார்

. 9 அடி உயரத்தில் திருமுகத்தில் புன்னகை ததும்ப அருள்பாலிக்கும் அவரை நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். 


பகல் பத்து, கடைசி 5  நாட்களில் மட்டும்  மீசை இல்லாத மூலவரை தரிசிக்கலாம்.


மகாபாரதப் போர் நடந்த போது பீஷ்மர் விட்ட அம்புகள் பட்ட காயத்தால் கிருஷ்ணர் முகத்தில் வடுக்கள் ஏற்பட்டன. உத்ஸவரின் முகத்தில் அந்த வடுக்களை இன்றும் காணலாம். உத்ஸவர் கதாயுதம் ஏந்தாமல் செங்கோலுடன் உள்ளார். 


இது பகவான் கிருஷ்ணர் ஆயர் குலத்தில் பிறந்ததை பிரதிபலிக்க தரித்ததாகச் சொல்கிறார்கள். 


மூலவர் மற்ற தலங்களில் உள்ளது போல இங்கு சக்கராயுதம் ஏந்தவில்லை. இடையில் வாள் தாங்கி . திருக்கையில் பாஞ்சஜன்யம் எனும் சங்கை ஏந்தியுள்ளார்.


இந்த கிருஷ்ணரை ஏன் வேங்கட கிருஷ்ணர் என்று செல்கிறார்கள் தெரியுமா? சுமதி மன்னன் திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தன் என்பதை படித்து இருப்பீர்கள். அந்த வேங்கடவனே இங்கு வந்து சேவை சாதித்ததால்  காட்சியுடன் சேர்த்து வேங்கட கிருஷ்ணர் என்றழைக்கப்படுகிறார்.


பேயாழ்வார் ஒரு பாசுரம், திருமழிசை ஆழ்வார் ஒரு பாசுரம், திருமங்கை ஆழ்வார் 10 பாசுரம் பாடி மங்களாசனம் செய்துள்ளனர். இத்தலத்தில் ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சீபுரம், அஹோபிலம், அயோத்தி ஆகிய 5 திவ்ய சேதப் பெருமாள்களை தனித்தனி சன்னதிகளில் தரிசனம் செய்யலாம். 

இதன் காரணமாக இத்தலம் 5 மூலவர்கள் கொண்ட தலமாகவும், பஞ்ச வீரத் தலமாகவும் அழைக்கப்படுகிறது.


முதல் சன்னிதியில் மூலவர் வேங்கடகிருஷ்ணன் இருப்பது போல இரண்டாவது ஸன்னிதியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஶயனக் கோலத்தில் உள்ளார். இவரை மன்னாதன் - தமிழில் என்னையாளுடையப்பன் என்றும் அழைக்கிறார்கள்.


தாயார் பெயர் வேதவல்லித்தாயார். வைகுண்டத்தில் இருந்து பூலோகம் வந்த திருமகள், இத்தலம் துளசிச் செடி வனமாக இருப்பது கண்டு, அங்குள்ள ஒரு மரத்தடியில் குழந்தை வடிவமாக தோன்றினார்.

அவரை பிருகு முனிவர் எடுத்து வளர்த்தார். 

திருமால் இளவரசன் வேடத்தில் வந்து தாயார் வேதவல்லியை திருமணம் செய்து, இத்தலத்திலேயே தங்கி விட்டதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. 


மூன்றாவது ஸன்னிதியில் கருடன் மீது அமர்ந்தபடி காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கிழக்கு நோக்கியபடி உள்ளார். இவரை பக்தர்கள் தேவப் பெருமாள் என்றும் அழைக்கிறார்கள். 

இவர் ஸப்தரோமா முனிவருக்கு கஜேந்திர வரதராக கருட வாகனத்தில் காட்சியளித்தார்.


நான்காவது சன்னிதியில் மேற்கு நோக்கியப்படி அஹோபிலம் நரசிம்மர் திருமார்பில் லட்சுமியுடன் யோகாஸநத்தில் வீற்றிருக்கிறார். நோய்கள் தீர இவர் ஸந்நிதி பின்புறம்  உப்பு, மிளகை காணிக்கையாக சமர்ப்பிக்கிறார்கள். அத்ரி முனிவருக்கு  தெள்ளிய சிங்கராக இவர் காட்சியளித்தார். 

இவரை வழிபட, கல்வியில் மேன்மை பெறலாம். இவர் சன்னதியில் மணிஓசை கூட எழுப்பப்படுவதில்லை.


ஐந்தாவது சன்னிதியில் அயோத்தி ராமர் தெற்கு நோக்கி உள்ளார். அவருடன் சீதாப்பிராட்டி, பரதன், லக்ஷ்மணன், சத்ருக்னன், மற்றும் எதிரே அனுமனும் சேவை சாதிக்கிறார்கள். 


மதுமான் முனிவருக்கு ராமர் தன் பட்டாபிஷேக கோலத்தை இத்தலத்தில் காட்சி அருளியதாக வரலாறு உள்ளது.


ஸ்ரீபார்த்தசாரதிஸ்வாமிக்கும், ஸ்ரீநரசிம்ம ஸ்வாமிக்கும் தனி, தனி கொடி மரம், வாசல்கள் உள்ளன.


இப்படி 5 சன்னிதிகளிலும் பெருமாள் அளவு கடந்த திரு அருள் ஆற்றலுடன் எழுந்தளும் உள்ளார். 

5 சன்னிதிகளிலும் மூலவர்கள் மங்களாசாஸனம் செய்யப்பட்டுள்ளதால், திருவல்லிக்கேணியை பஞ்சமூர்த்தி தலம்'' என்கிறார்கள்.


இத்தலத்தின் குளமான கைரவிணியில் ஒரு காலத்தில் அல்லி மலர்கள் அதிகமாக இருந்தன. இதனால்தான் அல்லிக்கேணி என்பது திரு சேர்த்து திருவல்லிக்கேணி என்ற பெயர் உண்டாயிற்று.


இந்த குளத்தில் இந்திர, கோம, மீன, அக்னி, விஷ்ணு ஆகிய 5 புண்ணிய தீர்த்தங்களும் கலந்து இருப்பதாக கூறப்படுகிறது. மீன் வசிக்காத இக்குளக்கரையில் நடக்கும் கஜேந்திர மோக்ஷம் கருடசேவை நிகழ்வு மிகவும் பிரசித்தம்.


திருவல்லிக்கேணி கோவிலில் முதலில் முன் மண்டபம் உள்ளது. அடுத்து மகா மண்டப நுழைவாயில் உள்ளது. 

அதன் மீதுதான் 5 நிலைகளும், 7 கலசங்களும் கொண்ட ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது.


கோவில் உள்ளே 5 மூலவர் சன்னிதி மீதுள்ள விமானங்கள், ஆனந்த விமானம், பிரணவ விமானம், புஷ்பக விமானம், சேஷ விமானம், தைவிக விமானம் என்று அழைக்கப்படுகிறது.


இத்தலம் இரண்டு பிராகாரங்களைக் கொண்டது. 


கிழக்கு கோபுரம் சுமதி தொண்டைமான் மன்னனால் கட்டப் பட்டது.


பிருகு, அத்ரி, மாரீஷி, மார்க்கண்டேயர், சுமதி, ஜபாலி, சப்தரோமா ஆகிய 7 ரிஷிகளும் இங்கு தவம் இருந்துள்ளனர். இதனால் சப்த ரிஷி ஸ்தலம் என்ற சிறப்புப் பெயரும் இத்தலத்துக்கு உண்டு.


ராமானுஜரின் பெற்றோர் குழந்தை செல்வம் வேண்டி இத்தலத்து பெருமாளிடம் மனம் உருக வழிபட்டார்களாம். இதனால் ஸ்ரீ பார்த்தசாரதியே அவர்கள் புத்ரனாக  ராமானுஜராக அவதரித்ததாக சொல்கிறார்கள்.


இங்கு 5 மூலவர் சன்னிதி தவிர ஸ்ரீவேதவல்லி தாயார் சன்னிதி தனியாக உள்ளது. இவருக்கு வெள்ளி தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.


மேலும் ஸ்ரீ ஆண்டாள்,  ஸ்ரீராமானுஜர், ஆழ்வார்கள், ஆசார்யர்கள் , ஸ்ரீ ஆஞ்ஜநேயர்,ஆகியோரும் உள்ளனர்.


இக்கோவிலில் தொன்றுதொட்டு  ஸ்ரீவைகாநஸ பகவத் சாஸ்த்ர ஆகம முறையும் தென்கலை வைணவ பாரம்பரியமும் கடை பிடிக்கப்படுகிறது. சித்திரை மாதம் ஸ்ரீபார்த்தசாரதிக்கும், ஆனி மாதம் ஸ்ரீ அழகிய சிங்கருக்கும் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. 


இவை தவிர ஏராளமான உற்சவங்கள் நடக்கின்றன. ஐப்பசி மாதம் கைத்தல சேவை, ஆவணி மாதம்  உரியடி திருவிழா மற்றும் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு உத்ஸவம்  நடக்கிறது. எப்போதும் தினமும் இத்தலம் திருவிழா கோலமாக காட்சியளிக்கிறது.


விவேகானந்தர், தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், ராமானுஜர், பாரதியார் ஆகியோர் பார்த்தசாரதியை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.


துலாபாரம் கொடுக்க இங்கு வசதி உள்ளது. 

அன்னதான திட்டமும் சிறப்பாக நடந்து வருகிறது.


இத்தலத்தில் திரு அத்யயநோத்ஸவம் அதன் அங்கமாக ஸ்ரீவைகுண்ட ஏகாதசி திருவிழா மிகச்சிறப்பாக நடத்தப்படுகிறது. அந்த சமயத்தில் பகல் பந்து, ராப்பத்து ஆழ்வார் அருளிச்செயல் சேவை பெருமாள் சிறந்த அலங்கார சாத்துபடி சேவை, மார்கழி மாத திருப்பாவை  கதா காலக்ஷேபங்கள் என்று கோவில் திருவிழாக் கோலமாக காட்சி அளிக்கும்.


வைகுண்ட ஏகாதசியின் 20 நாட்களில்  ஒரு நாள் இத்தல பெருமாள், திருப்பதி ஏழுமலையான் போல் முழுமையான அலங்காரம் கண்டருள்வார். 


ஸ்ரீபார்த்தசாரதிக்கு சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம்,போன்றவை சிறந்த  பிரசாதமாக  செய்யப்படுகிறது. வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமை  தோறும் நடக்கும் திருமஞ்சனத்தின்போது, சர்க்கரை பொங்கல் அளித்து வழிபட்டால் நினைத்தது நடக்கும். 

குழந்தை பாக்கியமும், குடும்பத்தில் செல்வ செழிப்பும் உண்டாகும்.


பொதுவாக கிருஷ்ண பரமாத்மா, ஆபத்து காலங்களில் ஓடோடி வந்து நமக்கு உதவுபவர் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உண்டு. அந்த பாக்கியத்தைப் பெற நாம் கிருஷ்ணனிடம் மனதை பறி கொடுக்க வேண்டும். பக்தி நெறியால் வழிபட வேண்டும். அந்த வழிபாட்டுக்கு ஏற்ற தலம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயம்தான்.  


லக்ஷ்மீ கடாக்ஷம் பெற்று வாழ்வில் செய்தற்கரியன சாதிப்பவர்களும்  மன அமைதி பெற விழைவோரும்,  பொதுவாழ்வில் சாதிக்கும் எண்ணம் உடையவர்களும் அவசியம் இத்தல பெருமாளை வழிபட வேண்டும். 


🌷🌷.

0 மறுமொழிகள்

Post a Comment

You can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.
எங்கள் முகவரி Address
ஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்
27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி
பாளையம்கோட்டை - 627002
திருநெல்வேலி மாவட்டம்.
தமிழ்நாடு. இந்தியா
Tmt. A. UshaRengan D.Astro.,
Consultant Astrologer,
Swathi Jothidha Aivagam,
27 A, Sivan Koil West Car Street,
Palayamkottai - 627 002
Tirunelveli District.
Tamil Nadu India.
தொலைபேசி: 94434 23897, 94425 86300, 0462 2586300
மின்னஞ்சல்:
tamiljoshier@gmail.com
joshier_urrao@yahoo.com
usharengan@hotmail.com
joshier_usharengan@dataone.in

For Consultation, please visit us or contact us through letter, phone or e mail only. Do not post your questions in the comment.

ஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை